தலைப்புச் செய்திகள்

ரத்தக்கறையால் துப்பு துலங்கியது: நர்சை பலாத்காரம் செய்து கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

மர வியாபாரியான நசீரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பத்தனம்திட்டா,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டாங்கல் பகுதியை சேர்ந்தவர் டிஞ்சு (வயது 25). நர்சாக பணியாற்றி வந்த இவர் கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக, ஆண் நண்பரான டிஜின் (36) என்பவருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி டிஞ்சு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து டிஜினை கைது செய்தனர். டிஞ்சு சாவுக்கு தான் காரணமில்லை என டிஜின் போலீசாரிடம் மன்றாடினார். ஆனால் போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையே டிஞ்சுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.

மேலும் அந்த பெண்ணின் விரல் நகத்தில் இருந்த தோல் செதில்கள் மற்றும் ரத்தக்கறை, டிஜின் உடையது அல்ல என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து நிரபராதி என அறிவித்து டிஜின் விடுவிக்கப்பட்டார். ஆனால் உண்மையான குற்றவாளி யார்? என்பதில் மர்மம் நீடித்தது. பின்னர் இந்த வழக்கை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். சுமார் 22 மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் துப்பு துலங்கியது. அதாவது, அருகில் உள்ள பகுதியை சேர்ந்த மர வியாபாரியான நசீர் (46) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நேரடி சாட்சிகள் இல்லாத நிலையில், டிஞ்சுவின் பிரேத பரிசோதனையின் போது பெறப்பட்ட ரத்தக்கறை ஆகியவற்றை பரிசோதித்த போது, நசீர் உடன் ஒத்து போனது. இதுதான் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக அமைந்தது. மேலும் நர்சுவை பலாத்காரம் செய்து வியாபாரி கொன்றது எப்படி? என்ற பகீர் தகவலும் அம்பலமானது.

சம்பவத்தன்று மர வியாபாரியான நசீர், டிஞ்சு வீட்டுக்கு மரத்தை வெட்டுவதற்காக வந்த போது, அங்கு டிஞ்சு மட்டுமே இருந்துள்ளார். அவரை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட, உடனே அவர் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்தார். அங்கு கண்ணிமைக்கும் நேரத்தில் டிஞ்சுவை தாக்கியதில் அவர் மயக்க நிலைக்கு சென்றார். பின்னர் அவரை நசீர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

பிறகு அரை குறை உயிருடன் போராடிய நர்சுவை அங்கிருந்த துணியால் கழுத்தில் கட்டி, வீட்டில் தொங்க விட்டு கொன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பான வழக்கு பத்தனம்திட்டா கூடுதல் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் நசீர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நீதிபதி ஜெயகிருஷ்ணன், குற்றவாளி நசீருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

இந்தியா ஒரு பாலைவன சோலை

அஜித்பவார் மறைவு: தேர்தல் பிரசாரத்தை கைவிட்ட முதல்-மந்திரி பட்னாவிஸ்

பாலஸ்தீனம் தனி நாடாக உருவாக இந்தியா ஆதரவு