தலைப்புச் செய்திகள்

ஜவ்வு மிட்டாய் போல இழுக்கும் கூட்டணி பேச்சு: திமுக, அதிமுக அணிக்குள் அப்படி என்னதான் பிரச்சினை?

ஆளுங்கட்சியான திமுகவும், ஆண்ட கட்சியான அதிமுகவும் கூட்டணி கதவை மூட முடியாமல் 'இலவு காத்த கிளி' ஆக காத்துக் கொண்டிருக்கின்றன.

சென்னை,

தமிழகம் அடுத்த 2 மாதத்தில் 17-வது சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த முறை திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவும் என்று தெரிகிறது.

ஆளுங்கட்சியான திமுக, கடந்த (2021) சட்டசபை தேர்தலைப் போலவே, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை தொடர்கிறது.

திமுகவில் குழு அமைக்கப்படவில்லை

மேலும், கடந்த (2024) நாடாளுமன்ற தேர்தலின்போது புதிதாக இணைந்த மக்கள் நீதி மய்யமும் கூடுதல் வலுவை கொடுக்கிறது. என்றாலும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை உன்னிப்பாக கவனித்து வரும் திமுக, கூட்டணியை அசுர பலத்துடன் கட்டமைத்துக்கொள்ள நினைக்கிறது.

அதனால், தேமுதிக, பாமக (டாக்டர் ராமதாஸ் அணி) ஆகிய கட்சிகளையும் கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவர தி.மு.க. தலைமை முயற்சிக்கிறது. ஆனால், கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான காங்கிரஸ், 'கூடுதல் தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பதால், திமுக கூட்டணியில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்தக் கட்சியுடனும் பேச்சு வார்த்தை தொடங்கப்படவில்லை. அதற்கான குழு கூட இன்னும் அமைக்கப்படவில்லை.

அதிமுக-பாஜக கூட்டணி

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவோ, பாஜக, பாமக (டாக்டர் அன்புமணி அணி), அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேமுதிகவை கொண்டுவரவும் பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில், அவர்களின் அதிக எதிர்பார்ப்பால் கூட்டணி கதவை மூடும் முடிவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தார். ஆனால், கூட்டணியில் உள்ள பாஜகவோ புதிய தமிழகம் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

நிர்வாகிகள் அதிருப்தி

கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, விரும்பிய கூட்டணியை அமைத்துவிட்டதாகவும், தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக கவனிக்குமாறும் நிர்வாகிகள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

ஆனால், நிர்வாகிகளோ, திமுக கட்டமைத்துள்ள பிரமாண்ட கூட்டணிக்கு முன்னால் நமது கூட்டணி எடுபடுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், தேமுதிகவையும் கூட்டணிக்குள் கொண்டுவர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஜவ்வு மிட்டாய் போல...

இப்படி, ஆளுங்கட்சியான திமுகவும், ஆண்ட கட்சியான அதிமுகவும் கூட்டணி கதவை மூட முடியாமல் 'இலவு காத்த கிளி' ஆக காத்துக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் முடிவை தெரிந்துகொள்வதற்காக தேமுதிகவும் காலம் தாழ்த்துவதால், ஜவ்வு மிட்டாய் போல கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி நிலை நீடித்துவருகிறது.

இதனால், திமுக கூட்டணியில் இணையும் ஆர்வத்தில் உள்ள டாக்டர் ராமதாசும் பல நாட்களாக காக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

காத்திருக்கும் தவெக

அதே நேரத்தில், 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம்' என்று கூட்டணிக்கு வலை விரித்த தவெகவும், ஆளில்லாத கடையில் டீ ஆற்றுவது போல, யாரும் வராத நிலையிலும் நம்பிக்கையுடன் கூட்டணி கதவை திறந்து வைத்து வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறது. திமுக, அதிமுக கூட்டணியில் அதிருப்தி அடைபவர்கள் கடைசி நேரத்தில் நம் பக்கம் வருவார்கள் என்றும் நம்புகிறது.

இப்படி ஒவ்வொரு அணியிலும் பிரச்சினை இருப்பதால், கூட்டணி அமைப்பது தாமதமாகிக் கொண்டே போகிறது. கூட்டணி முடிவானால்தான் அடுத்து தொகுதி பங்கீட்டையும் தொடங்க முடியும்.

விருப்ப மனு விநியோகம்

ஆனால், திமுக மற்றும் இரு கம்யூனிஸ்டு கட்சிகளை தவிர பிற கட்சிகள், 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களை தொண்டர்களிடம் இருந்து வாங்கத் தொடங்கிவிட்டன. கூட்டணியில் கிடைக்கும் தொகுதிகளை பொறுத்து, அடுத்த முடிவை அந்த நேரத்தில் எடுக்கலாம் என்றும் அக்கட்சிகள் நினைக்கின்றன.

அதே நேரத்தில், ஆரம்பம் முதல் தனித்து போட்டி என்ற கொள்கையுடன் வலம் வரும் நாம் தமிழர் கட்சி, விருப்ப மனு எதுவும் வாங்காமல், 234 தொகுதிகளுக்கும் 50:50 என்ற அளவில் ஆண் - பெண்களுக்கு சரிசமமாக இடஒதுக்கீடு வழங்கி வேட்பாளர்களையும் தேர்வு செய்துவிட்டது.

தேர்தல் பந்தயம்

திருச்சியில் வரும் 21-ந் தேதி நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் அனைத்து வேட்பாளர்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மொத்தத்தில், தேர்தல் பந்தயத்தில் இதுவரை நாம் தமிழர் கட்சி மட்டுமே ஓடத் தொடங்கியிருக்கிறது.