தலைப்புச் செய்திகள்

மெட்ரோ ரெயில் திட்டம்: பூந்தமல்லி-வடபழனி இடையே பாதுகாப்பு கமிஷனரின் ஆய்வு இன்று தொடக்கம்

போரூர் - வடபழனி இடையில் கடந்த மாதம் 11-ந்தேதி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது.

சென்னை,

சென்னையில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் (26 கிலோ மீட்டர்) பூந்தமல்லி போரூர் வரையிலான 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் முடிந்துள்ளது.

இவ்வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழையும் ரெயில்வே வாரியம் வழங்கியது. இதேபோல, போரூர் - வடபழனி இடையில் கடந்த மாதம் 11-ந்தேதி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது. இதனால், பூந்தமல்லி - வடபழனி இடையில் மெட்ரோ ரெயிலை இயக்கு வதற்கான அனைத்து சோதனை பணிகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முழுமையாக முடித்தது.

இந்த நிலையில், பூந்தமல்லி - வடபழனி இடையிலான 16 கிலோ மீட்டர் தூரத்துக்கு தென்மண்டல ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி தலைமையிலான குழுவினர் இன்று(புதன்கிழமை) சோதனைகளை தொடங்குகிறார்கள். பூந்தமல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு சோதனை தொடங்குகிறது.

அப்போது, மெட்ரோ ரெயில் பாதைகள், ரெயில் நிலையங்கள், பிரேக்கிங் தொழில்நுட்பம், சிக் னல் தொழில்நுட்பம், பயணிகளின் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல் வேறு நிலைகளை ஆய்வு செய்ய உள்ளார். இன்றைய தினம் பூந்தமல்லி - போரூர் இடையிலான 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டும் ஆய்வு நடத்துவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 3 நாட்கள் ஆய்வு நடைபெற இருக்கிறது. நாளை நடைபெறும் 2-ம் நாள் ஆய்வில் போரூர் -வடபழனி இடையில் ஆய்வு செய்ய இருக் கிறார். 3-வது நாளில் பூந்தமல்லி - வடபழனி இடையில் முழுமையாக மெட்ரோ ரெயிலை மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடத்த இருக்கிறார்.

ஆய்வின்போது குறைபாடுகள் கண்டறியப்படும் பட்சத்தில் அதை சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவார். அதன்பின்னர், மெட்ரோ ரெயில் இயக்குவது குறித்த ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் இந்த மாதம் இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.