தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில் 
தலைப்புச் செய்திகள்

வேண்டுதலை நிறைவேற்றும் தாளக்கரை லட்சுமி நரசிம்மர்

நரசிம்மரும், லட்சுமி தாயாரும் தனித்தனியே நின்ற கோலத்தில் உள்ள காட்சியை காண்பது மிகவும் அரிது.

திருப்பூர் மாவட்டம் தாளக்கரை எனும் ஊரில் அமைந்துள்ளது, பழமைவாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோவில், பொதுவாக லட்சுமி நரசிம்மர் காட்சி தரும் தலங்களில் நரசிம்ம பெருமாளின் மடியில் லட்சுமி தாயார் அமர்ந்த கோலத்தில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மரும், லட்சுமி தாயாரும் தனித்தனியே நின்ற வண்ணம் அருள்பாலிக்கின்றனர். லட்சுமி நரசிம்மர் கோவில்களில் இத்தகைய காட்சியை காண்பது மிகவும் அரிது. மேலும், லட்சுமி நரசிம்மர் தலையில் ஆதிசேஷன் காட்சி தரும் தலமாகவும், கிரக தோஷங்கள் போக்கும் சர்ப்ப விநாயகர் உள்ள தலமாகவும் இக்கோவில் உள்ளது.

நரசிம்மர், சங்கு, சக்கரம் ஏந்தி, கோரைப்பற்களுடன் காணப்பட்டாலும் சாந்த மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டபத்தில் சாளக்கிராமம் உள்ளது. இந்த சாளக்கிராமமே, முதலில் நரசிம்மராக வழிபடப்பட்டுள்ளது. எனவே இதனை 'ஆதிமூர்த்தி' என்கிறார்கள்.

இக்கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை, ஞாயிற்றுக்கிழமைகளில் பரிகார பூஜை போன்றவை மிகவும் விசேஷமாக நடைபெறும். திருமணத் தடை விலக, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் சிறக்க, பில்லி, சூனியம், ஏவல் அகல, குடும்ப பிரச்சினைகள் நீங்க இக்கோவிலுக்கு வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி - புளியம்பட்டி சாலையில் 14 கிலோமீட்டர் தொலைவில் தண்டுக்காரன் பாளையம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் தாளக்கரை லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் அமைந்துள்ளது.