கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாகவே சாரல் மழை, உறைபனி, கடுங்குளிர் என பருவநிலை மாறி, மாறி நிலவி வருகிறது. அவ்வப்போது மேகங்கள் தரையிறங்கி பசுமை போர்த்திய மலைகளை வருடிச்செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக அடர்ந்த பனிமூட்டம், சாரல் மழை என காலநிலை நிலவியது. அதன்தொடர்ச்சியாக நேற்று கொடைக்கானல் மலைப்பகுதியில் மிதமான வெப்பம் நிலவியது. அத்துடன் கதிரவன் உதித்த காலை நேரத்தில் செண்பகனூர் சிட்டிவியூ மற்றும் கோக்கர்ஸ்வாக் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணில் இருந்து மேகங்கள் தரையிறங்கி, மலைமுகடுகளை முத்தமிட்டன.
அப்போது சூரியகதிர்கள் பட்டவுடன் வெண்பஞ்சுகள் போன்ற மேகங்கள் மலைகளில் தவழ்ந்து சென்றன. இந்த ரம்மியமான காட்சிகளை நடைபயிற்சி சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். மேலும் தங்களது செல்போனில் புகைப்படம், ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.