செய்திகள்

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை: 50 சதவீத படுக்கைகளை ஒதுக்காத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை - அதிகாரிகளுக்கு எடியூரப்பா அதிரடி உத்தரவு

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 50 சதவீத படுக்கைகளை ஒதுக்காத தனியார் மருத்துவனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் தொடங்கியது.
கடந்த 3 மாதங்களாக குறைந்த அளவில் பாதிப்பு இருந்த வைரஸ் தொற்று கடந்த ஜூன் மாதம் முதல் நாள் தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனால் அரசு ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக கொரோனா நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தனியார் மருத்துவமனைகளை நோக்கி செல்கிறார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் சம்பவங்களும், இதனால் கொரோனா பாதித்தவர்கள் உயிரிழக்கும் சம்பவமும் அதிகரித்து வருகிறது.

இதை தடுக்கும் விதமாக, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், அரசால் பரிந்துரைக்கப்படும் கொரோனா பாதித்தவர்களை அரசு நிர்ணயித்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இன்னும் பல தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 50 சதவீத படுக்கைகள் ஒதுக்காமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு தெற்கு மண்டல கொரோனா தடுப்பு பொறுப்பாளர்களுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், தெற்கு மண்டல பொறுப்பாளரான மந்திரி ஆர்.அசோக், தேஜஸ்வி சூர்யா எம்.பி. மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 50 சதவீத படுக்கைகளை ஒதுக்கும்படி தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர்களுடன் 4 முறை ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளேன். ஆனாலும் அவர்கள் அரசு பிறப்பித்துள்ள உத்தரவை பின்பற்றியதாக தெரியவில்லை.

அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறிவிட்டு பிறகு கண்டுகொள்வது இல்லை. அதனால் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்காத தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் காரணங்களை கூறக்கூடாது. தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அத்தகைய மருத்துவமனைகள் மீது பேரிடர் நிர்வாக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெங்களூரு தெற்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பொறுப்பாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் 10 நாட்களில் பாதிப்பை குறைக்க வேண்டும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.