ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வடுகம் கிராமம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). கட்டிட மேஸ்திரி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (45). இவரும் கட்டிட மேஸ்திரி. இவர்கள் இருவரும் நண்பர்கள்.
மணிகண்டன் தனக்கு வரவேண்டிய கூலி பணத்தை ஒருவரிடமிருந்து வாங்கி வரச்சொல்லி நண்பர் சந்திரசேகரனிடம் கூறியுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று இரவு மணிகண்டன் அவரது நண்பர் சந்திரசேகரன் வீட்டுக்கு சென்று கூலியை வாங்கி வந்தாயா? என்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன் அவரது வீட்டுக்குள் வைத்திருந்த கொடுவாளை எடுத்து வந்து மணிகண்டனை சரமாரியாக வெட்டினார். இதில் மணிகண்டனுக்கு தலை, தோள்பட்டை, கை, கால்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்த சந்திரசேகரனின் மாமியார் ஆராயும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கட்டிட மேஸ்திரி மணிகண்டன் நாமகிரிப்பேட்டை போலீசில் சந்திரசேகரன் மற்றும் அவரது மாமியார் ஆராயி ஆகியோர் மீது புகார் செய்தார். அதன்பேரில் சந்திரசேகரன், ஆராயி ஆகியோர் மீது நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று சார்பு நீதிமன்ற நீதிபதி சரவணன் தீர்ப்பு அளித்தார்.
தீர்ப்பில், ஆராயி இறந்துவிட்டதால் அவர் மீது உள்ள குற்றச்சாட்டு அற்றுபோய்விட்டதாக அறிவித்தார். சந்திரசேகரன் மீதான கொலை முயற்சி வழக்குக்காக 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 294-பி-யின் கீழ் 3 மாதம் மெய்க்காவல் சிறை தண்டனையும், ரூ.300 அபராதமும் விதித்து இரண்டையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும், என்று தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து நாமகிரிப்பேட்டை போலீசார், சிறை தண்டனை விதிக்கப்பட்ட சந்திரசேகரனை கோவை சிறைச்சாலைக்கு அழைத்துச்சென்றனர்.
இந்த வழக்கில் அரசு வக்கீலாக ஆர்.கே.டி.தங்கதுரை வாதிட்டார்.