செய்திகள்

ஆளில்லா விமானங்கள் மூலம் துருக்கி தாக்குதல்: சிரியா படைவீரர்கள் 26 பேர் கொன்றுகுவிப்பு

இத்லிப் மாகாணத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் சிரியா படை வீரர்கள் 26 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

தினத்தந்தி

டமாஸ்கஸ்,

சிரியாவில் ரஷியா ஆதரவு பெற்ற அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி உள்நாட்டுப் போர் தொடங்கியது.

இந்தப் போர் தொடர்ந்து 9 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் கடைசியாக இருந்து வருகிற இத்லிப் மாகாணத்தை பிடிப்பதற்காக அதிபர் ஆதரவு படைகள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு ரஷிய படைகள் பக்க பலமாக இருந்து வருகின்றன.

கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக தாங்கள் அமைத்துள்ள கண்காணிப்பு நிலைகளில் இருந்து சிரியா அதிபர் ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தக்கூடாது என துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பிப்ரவரி 29-ந் தேதிக்குள் தாங்கள் அமைத்துள்ள கண்காணிப்பு நிலைகளில் இருந்து சிரியா படைகள் வெளியேறி விட வேண்டும் என்று துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதை கண்டுகொள்ளாமல் சிரியா அதிபர் ஆதரவு படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த 27-ந் தேதி சிரியா அதிபர் ஆதரவு படையினர் நடத்திய தாக்குதலில் துருக்கி படைவீரர்கள் 34 பேர் பலியாகினர். இது துருக்கிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிரியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க அந்த நாடு முடிவு எடுத்தது.

இதைத் தொடர்ந்து சிரியாவில் அலெப்போ நகருக்கு அருகே அமைந்திருந்த சிரியாவின் ரசாயன ஆயுத கிடங்கை தாங்கள் தாக்குதல் நடத்தி அழித்து விட்டதாக துருக்கி அறிவித்தது.

இந்த நிலையில், இத்லிப் மாகாணத்தில் சிரியா அதிபர் படைகளின் நிலைகளையும், வாகனங்களையும் ஒரே நேரத்தில் குறி வைத்து நேற்று முன்தினம் துருக்கி அதிரடியாக ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதல்களில் சிரியா அதிபர் ஆதரவு படை வீரர்கள் 26 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த தகவலை சிரியாவில் உள்ள மனித உரிமைகள் காப்பகம் வெளியிட்டது.

இதுபற்றி அந்த அமைப்பு நேற்று கூறுகையில், சிரியா படைவீரர்கள் 26 பேரை துருக்கியின் ஆளில்லா விமான தாக்குதல்கள் கொன்று குவித்ததுடன், அவற்றின் 18 வாகனங்களையும் நிர்மூலம் ஆக்கி விட்டன என தெரிவித்தது.

கடந்த 4 நாட்களாக நடந்து வருகிற கடும் சண்டையில், அதிபர் ஆதரவு படைகளின் பிடியில் இருந்து வந்த சாராகெப் நகரம் உள்ளிட்ட நகரங்களையும், 14 கிராமங்களையும் கிளர்ச்சியாளர்கள் படைகள் பிடித்துள்ளன.

சிரியாவில் துருக்கி கூடுதல் படைகளை குவித்துள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

கடந்த மாதம் 2-ந் தேதியில் இருந்து இதுவரை 8 ஆயிரம் துருக்கி படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது