செய்திகள்

தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து கல்லூரி மாணவி சாவு - மூடி உடைந்ததால் விபரீதம்

தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியின் மூடி உடைந்ததால் அதன் உள்ளே விழுந்து கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தாளமுத்துநகர் சுடலையாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலைமணி (வயது 49). இவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் சரசுவதி (19), தூத்துக்குடியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம். படித்து வந்தார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வீட்டில் இருந்த சரசுவதி, துணிகளை துவைத்து விட்டு, அவற்றை கொடியில் உலர வைத்துக்கொண்டு இருந்தார்.

அவர் வீட்டில் இருந்த கழிவுநீர் தொட்டியின் மீது ஏறி நின்றபடி துணிகளை உலர வைத்தார். அப்போது கழிவுநீர் தொட்டியின் மூடி திடீரென உடைந்தது. இதனால் சரசுவதி கழிவுநீர் தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கழிவுநீர் தொட்டியின் மூடி உடைந்ததால் ஏற்பட்ட விபரீதத்தில் அதன் உள்ளே விழுந்து மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...