செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் மலேசிய மணல் விற்பனை தொடங்கியது நேற்று 50 டன் மணல் லாரிகளில் ஏற்றி செல்லப்பட்டது

தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பில் இருந்த மலேசிய மணல் விற்பனை தொடங்கியது. நேற்று 50 டன் மணல் விற்பனை செய்யப்பட்டு, லாரிகளில் ஏற்றி செல்லப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பில் இருந்த மலேசிய மணல் விற்பனை தொடங்கியது. நேற்று 50 டன் மணல் விற்பனை செய்யப்பட்டு, லாரிகளில் ஏற்றி செல்லப்பட்டது.

தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து 55 ஆயிரத்து 445 டன் ஆற்றுமணலை இறக்குமதி செய்தது. இந்த மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்கப்பட்டது. அந்த மணலை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்தது. இதனால் மணலை வெளியே எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் அந்த மணலை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அந்த நிறுவனம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

அந்த வழக்கு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆஜராகி தமிழக அரசு தரப்பில் இருந்து மலேசிய மணலை விற்பனை செய்வதற்காக ரூ.10 கோடியே 56 லட்சத்துக்கான வரைவோலை கோர்ட்டில் வழங்கினார். அதன் பின்னர் மலேசிய மணலை தமிழக அரசு விற்பனை செய்ய துறைமுக நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள மலேசிய மணலை விற்பனை செய்வதற்கு ஆன்லைன் பதிவு தொடங்கப்பட்டது. கோர்ட்டு அனுமதி அளித்ததன் பேரில் நேற்று மணல் விற்பனை தொடங்கியது. திருச்சி மாவட்ட பொதுப்பணி துறை அதிகாரிகள் மேற்பார்வையில் மணல் விற்பனை தொடங்கியது.

முதல் நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டம் பன்னைவிளை, சாத்தான்குளம், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் ராஜபாளையம் ஆகிய பகுதிகளுக்கு 4 லாரிகளில் 54 டன் மணல் விற்பனை செய்யப்பட்டது. மணல் இருப்பு உள்ளவரை விற்பனை நடைபெறும்.