செய்திகள்

உடுமலை சங்கர் கொலை வழக்கு: 6 பேரின் தூக்கு தண்டனை ரத்து - சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

கலப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது. இவர்களில் கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

சென்னை,

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் கவுசல்யா.

இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து கடந்த 2015-ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்துக் கொண்டார். இந்த காதலுக்கு கவுசல்யா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் 2016-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி கணவர் சங்கருடன், கவுசல்யா உடுமலைப்பேட்டை கடைவீதிக்கு சென்றார். அப்போது மர்ம கும்பல் அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் சங்கர் உயிரிழந்தார். கவுசல்யா வெட்டுக் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கொலை, கொலை முயற்சி, கூட்டுச்சதி, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை உள்பட பல சட்டப்பிரிவுளின் கீழ் உடுமலைப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இந்த வழக்குகளில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, பிரசன்னகுமார், ஜெகதீசன், எம்.மணிகண்டன், செல்வக்குமார், கலைதமிழ்வாணன், மதன், ஸ்டீபன் தன்ராஜ், மற்றொரு மணிகண்டன் என 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் செசன்சு கோர்ட்டு கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோரை விடுதலை செய்து கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி தீர்ப்பு அளித்தது. கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், எம்.மணிகண்டன், செல்வக்குமார், கலைதமிழ்வாணன், மதன் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கியது.

குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின்படி, 6 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்ய இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டுக்கு திருப்பூர் செசன்சு கோர்ட்டு அனுப்பி வைத்தது.

இதேபோல், தண்டனை பெற்ற அனைவரும், தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

அத்துடன் இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அன்னலட்சுமி உள்பட 3 பேருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் உடுமலைப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்குகள் அனைத்தையும் ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்தனர்.

அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எமலியாஸ், அரசு குற்றவியல் வக்கீல் பிரதாப்குமார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வி.கார்த்திக், வக்கீல்கள் ஆர்.கார்த்திகேயன், என்.மனோகரன், சி.டி.முருகப்பன், ஏ.எல்.காந்திமதி, நாகசுந்தரம் ஆகியோர் ஆஜரானார்கள்.

பல மாதங்கள் நடந்த இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை கடந்த மார்ச் மாதம் முடிவுக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டனர்.

பரபரப்பு தீர்ப்பு

இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

இந்த வழக்கில் கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால், கீழ்க் கோர்ட்டு அளித்த தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம். இந்த தீர்ப்பை எதிர்த்து துணை போலீஸ் சூப்பிரண்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

கவுசல்யாவின் தந்தை விடுதலை

கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி மீது இந்த வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. இதனால், அவருக்கு கீழ்க் கோர்ட்டு வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்கிறோம். அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்கிறோம்.

ஸ்டீபன் தன்ராஜ், மணிகண்டன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. இதனால் ஸ்டீபன் தன்ராஜூக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள்தண்டனையையும், மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையையும் ரத்து செய்கிறோம்.

ஆயுள் தண்டனையாக குறைப்பு

அதேநேரம், ஜெகதீசன், எம்.மணிகண்டன், செல்வக்குமார், கலைதமிழ்வாணன், மதன் ஆகியோர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளன. இருந்தாலும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கின்றோம். இவர்கள் குறைந்தது 25 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு

அதாவது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 11 பேரில், 6 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். 5 பேருக்கு

விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அரசு தரப்பு

கூடுதல் அட்வகேட் ஜெனரல் எமலியாஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு