செய்திகள்

டாக்டர், என்ஜினீயர் என எழுதப்பட்ட சீருடை: மாணவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த புதிய முயற்சி

மாணவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த அவர்களை டாக்டர், என்ஜினீயர் என எழுதப்பட்ட சீருடையை அணிந்து வர செய்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

திருக்காட்டுப்பள்ளி,

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ தலைவர் சிவன் ஆகியோர் அரசு பள்ளிகளில் படித்து சாதனை படைத்தவர்கள். உலக அளவில் சாதனையாளர்களாக திகழ்பவர்கள் அரசு பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் என்றபோதிலும், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் தயக்கம் உள்ளது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பூதலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மற்ற பள்ளிகளில் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா என மாணவர் குழுக்களை அமைப்பார்கள்.

ஆனால் இந்த பள்ளியில் மாணவர்கள் என்னவாக ஆசைப்படுகிறார்களோ, அந்த பெயரில் மாணவர் குழுக்களை ஆசிரியர்கள் ஏற்படுத்தி உள்ளனர். அதன்படி டாக்டர்கள் குழு, என்ஜினீயர்கள் குழு, கலெக்டர்கள் குழு, விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் தங்களுடைய சீருடையின் பின்புறம் (டீ-சர்ட்) டாக்டர், என்ஜினீயர் என ஆங்கிலத்தில் எழுதி உள்ளனர்.

இவ்வாறு டாக்டர், என்ஜினீயர் என எழுதப்பட்ட சீருடையை அணியும்போது மாணவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவதாக ஆசிரியர்கள், பெற்றோர் கூறுகிறார்கள். பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் காட்வின்பொன்ராஜ் ஜெயகரன் கூறியதாவது:-

மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவர்களே இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம், நான் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றபோது ஏற்பட்டது. அதன் காரணமாக காலையில் வகுப்புகள் தொடங்கும் முன்பு தியானம் செய்ய வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தினேன்.

முதலில் மாணவர்கள் மத்தியில் தியானம் செய்வதற்கு சிறிய அளவில் தயக்கம் காணப்பட்டது. பின்னர் தியானம் செய்வது சகஜமாகி விட்டது. மாணவர்களின் சிந்தனையிலேயே தன்னம்பிக்கையை தூண்ட வேண்டும் என்பதற்காக மாணவர் குழுக்களின் பெயர்களை கலெக்டர், என்ஜினீயர், விஞ்ஞானி, டாக்டர் என மாற்றினேன்.

இந்த பெயர்கள் எழுதப்பட்ட டி-சர்ட்டை மாணவர்கள் சீருடையாக அணிந்து வர ஏற்பாடு செய்வோம் என்று முதலில் நான் கூறியபோது ஆசிரியர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த திட்டத்தை மாணவர்கள் மத்தியில் சொன்னபோது அவர்கள் வரவேற்று, டி-சர்ட் வாங்க முன்வந்தனர்.

அதன் பின்னர் டாக்டர், என்ஜினீயர், கலெக்டர் என குழுக்களாக பிரித்து மாணவர்கள் விரும்பிய வகையில் டி-சர்ட் அணிந்து பள்ளிக்கு வர தொடங்கியதும் மாணவர்களின் செயலில் மாற்றம் தெரிந்தது. முன்பு இருந்த அலட்சிய போக்கு தற்போது இல்லை. ஆசிரியர்களை மதித்து தன்னம்பிக்கையுடன் பாடம் படித்து வருகிறார்கள். இவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர், என்ஜினீயர் போன்ற பெயர்களை தாங்கிய புதிய சீருடையை அணிந்து வர தொடங்கியதும் இப்பள்ளி மாணவர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்து, விளையாட்டுகளில் சாதனைகளை படைத்து வருவதாக பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் கோபிநாதன் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்