கொல்கத்தா,
கொல்கத்தாவில் நடைபெற்ற சி.ஏ.ஏ. ஆதரவு பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:
தேர்தல் பிரச்சாரத்திற்காக நாங்கள் இங்கு வந்தபோது, அனுமதி மறுக்கப்பட்டன, கட்டிடங்கள் இடிக்கப்பட்டன மற்றும் தவறான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 40 க்கும் மேற்பட்ட பாஜக தொழிலாளர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர், ஆனால் இத்தனைக்கும் பிறகும், மம்தா பானர்ஜியால் எங்களை தடுக்க முடிந்ததா?
மமதா பானர்ஜி எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் பிரதமர் மோடி, குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்த போது மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். குடியுரிமை சட்ட திருத்தத்தை காங்கிரசும் இடதுசாரிகளும் இணைந்து எதிர்க்கின்றன. மேற்கு வங்கத்தில் ரெயில் நிலையங்கள் எரிக்கப்பட்டன. அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நாங்கள் முயற்சிக்கும் போது ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள்?
மம்தாவின் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்கத்தில் வளர்ச்சிப் பணிகள் முடங்கி போய் உள்ளன. சிறுபான்மையினரின் குடியுரிமையை பறிப்பதற்காக குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்படவில்லை.
ஒவ்வொருவருக்கும் குடியுரிமை வழங்குவதற்கு தான் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதை மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியால் தடுத்துவிட முடியாது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்க வேண்டாமா? நீங்களே பதில் சொல்லுங்கள்.. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனைத்து தடைகளையும் பிரதமர் மோடி அகற்றிவிட்டார். மேற்கு வங்கத்தில் வாரிசு அரசியலை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.