செய்திகள்

சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய பேய் வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வீடியோ எடுத்தனர் - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

பெங்களூருவில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதற்காக பேய் வேடம் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வீடியோ எடுத்த கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே ஷெரீப் நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டும், முகத்தை தலைமுடியால் மூடியபடியும் ஒரு நபர் பேய் வேடமிட்டு சுற்றி திரிந்தார். அந்த நபர் அப்பகுதி வழியாக வந்த பொதுமக்கள் முன்பு திடீரென்று தோன்றி பேய் போல சைகை செய்தார். இதனால் ஷெரீப் நகர் வழியாக சென்ற மக்கள் பீதி அடைந்தனர். அந்த நபரை பார்த்து பயந்து மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

மேலும் அப்பகுதி வழியாக சென்ற ஒரு கார், ஆட்டோவையும் பேய் வேடமிட்டிருந்த மர்மநபர் வழிமறித்தார். கார், ஆட்டோ டிரைவர்களையும் அவர் பயமுறுத்தினார். அத்துடன் அப்பகுதி வழியாக வந்த ஒரு நபரை, உருட்டு கட்டையை கையில் வைத்து கொண்டு அந்த நபர் துரத்தினார். இதனால் பயந்துபோன அப்பகுதி மக்கள் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் யஷ்வந்தபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனால் அந்த நபர் பேயா? மர்மநபர்கள் யாரும் வேண்டும் என்றே மக்களை பயமுறுத்துகிறார்களா? என்பதை கண்டுபிடிக்க சீருடை அணியாமல் ஒரு போலீஸ்காரர் வந்தார். அவரையும், அந்த நபர் பயமுறுத்தினார். உடனே அந்த போலீஸ்காரர் மற்றும் சக போலீசார் பேய் வேடமிட்டிருந்த நபரை மடக்கி பிடித்தனர். அப்போது அவர், தான் பேய் இல்லை என்றும், பேய் போல வேடம் அணிந்து பொதுமக்களை பயமுறுத்தி வீடியோ எடுப்பதாகவும் கூறினார். அந்த சந்தர்ப்பத்தில் வீடியோ எடுத்து கொண்டிருந்த, அவரின் நண்பர்களும் ஓடிவந்தனர்.

இதையடுத்து, ஒட்டு மொத்தமாக அங்கிருந்த 7 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஆர்.டி.நகரை சேர்ந்த ஜான் மல்லிக்(வயது 20), நவீத்(20), சஜில் முகமது(21), ஷாகிப்(20), சையத் நபீல்(20), யூசுப் அகமது(20), நாகவாராவை சேர்ந்த முகமது ஆயுப்(20) என்பதும், 7 பேரும் பல்வேறு கல்லூரிகளில் படித்து வருவதும் தெரியவந்தது.

அதாவது அந்த மாணவர்கள் பேய் வேடம் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்தி, அதனை வீடியோவாக எடுத்து யூ டியூப், டிக்-டாக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அதன்படி, யஷ்வந்தபுரம் அருகே ஷெரீப்நகருக்கு வந்து ஒரு மாணவர் மட்டும் வெள்ளை நிற ஆடை அணிந்தும், முகம் தெரியாத அளவுக்கு முடியை விரித்து போட்டும் பொதுமக்களை பயமுறுத்தியது தெரியவந்தது. ஆனால் இதுபோன்று வீடியோ எடுப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும், அத்துடன் போலீசாரிடமும் முறையான அனுமதி பெற வேண்டியது அவசியமாகும்.

ஆனால் 7 மாணவர்களும் எந்த விதமான அனுமதியும் பெறாமலும், பொதுமக்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமலும் வீடியோ எடுத்திருந்தனர். இதனால் பேய் வேடம் அணிந்தவரை பார்த்து பலர் பீதியும், பயமும் அடைந்திருந்தனர். இதையடுத்து, 7 மாணவர்கள் மீதும் யஷ்வந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் யஷ்வந்தபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து