சமயபுரம்,
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள திருப்பட்டூர் முத்துராஜா தெருவை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 58). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணம் திருட்டு போனது. இதைத்தொடர்ந்து ராஜம்மாள் கோவிலுக்கு சென்று பணம் எடுத்தவர்களை நீயே பார்த்துக்கொள் என்று சாமியிடம் முறையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான சுப்பிரமணி என்பவர் சில மாதங்களில் இறந்து விட்டார். ராஜம்மாள் கோவிலுக்கு சென்று முறையிட்டதால்தான், தனது தந்தை இறந்துவிட்டார் என்று சுப்பிரமணியின் மகன் மகேந்திரன்(25) நினைத்ததாகவும், இதனால் அவர் சிறுவயதில் இருந்தே ராஜம்மாள் மீது வெறுப்புடன் இருந்ததாகவும் தெரிகிறது. இதனால் ராஜம்மாளும், மகேந்திரனும் அடிக்கடி சாடை, மாடையாக திட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை
இந்நிலையில் நேற்று மதியம் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஏற்கனவே ராஜம்மாள் மீது இருந்த ஆத்திரத்தில் மகேந்திரன், வீட்டில் இருந்த கோடரியை எடுத்து ராஜம்மாளின் கழுத்து மற்றும் தலையில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ராஜம்மாள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ராஜம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, மகேந்திரனை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய கோடரியை பறிமுதல் செய்தனர். பெண் கோடரியால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.