கிராமசபை கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சியின் காரணமாக கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இல்லாத அனைத்து ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் காக்களூர் ஊராட்சி மன்ற தலைவர் சுபத்ரா ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
34 தீர்மானங்கள்
இந்த கூட்டத்தில் பொதுநிதி செலவினம், கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட 34 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு தீர்மானங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அளித்த கோரிக்கைகளை ஏற்று அனைத்து தீர்மானங்களும் ஒருமனதாக ஏற்கப்பட்டது. மேலும் ஊராட்சியில் உள்ள பொது பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அதனை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் மல்லிகா, திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதிநாதன், வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் எத்திராஜ், பூவண்ணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புள்ளிலைன் ஊராட்சி
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புள்ளிலைன் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் தமிழ்செல்வி ரமேஷ் தலைமையில் புதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. ஊராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பொதுமக்களுடன் ஆலோசனைகள் நடைபெற்றன. பொது சுகாதாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் துணைத்தலைவர் கே.மாதவன், அலுவலர் அருள்மொழி, சமூக ஆர்வலர் ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சமூக ஆர்வலர் ரமேஷ் அன்பளிப்பாக வழங்கிய தூய்மை பணிக்கான வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.