செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில், கைக்குழந்தை உள்பட 23 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 551 ஆக உயர்ந்தது

விழுப்புரம் மாவட்டத்தில் கைக்குழந்தை உள்பட 23 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 551 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா நோயால் 528 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஏற்கனவே 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 383 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 136 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் மேலும் 23 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் திண்டிவனம் அருகே ஒலக்கூரை சேர்ந்த 30 வயது நபர், இவருடைய 3 வயது மகன், 6 மாத பெண் குழந்தை, இவர்களுடைய உறவினரான 50 வயது பெண், விழுப்புரம் அருகே சிறுவை கிராமத்தை சேர்ந்த 19 வயது வாலிபர், செஞ்சி அருகே கவரை கிராமத்தை சேர்ந்த 27 வயது வாலிபர், அவருடைய 48 வயது தாய், இவர்களது உறவினரான 27 வயது பெண், இவருடைய 9 வயது மகள், 3 வயது மகன் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த 21 வயது பெண், 20 வயது பெண், விழுப்புரத்தை சேர்ந்த 23 வயது வாலிபர், விழுப்புரம் அருகே காரணை கிராமத்தை சேர்ந்த 65 வயது முதியவர், இவருடைய 53 வயதுடைய மனைவி, இவர்களது 27 வயது மகள், விழுப்புரம் அருகே நங்கியானந்தல் கிராமத்தை சேர்ந்த 26 வயது பெண், கடம்பூரை சேர்ந்த 36 வயது பெண், கிருஷ்ணாபுரம் பட்டறைபாதி பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர், ஜெகநாதபுரத்தை சேர்ந்த 27 வயது பெண், கண்டாச்சிபுரத்தை சேர்ந்த 62 வயது முதியவர், திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த 25 வயது பெண், விக்கிரவாண்டி அருகே செ.குன்னத்தூரை சேர்ந்த 28 வயது பெண் ஆகியோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 8 பேர் சென்னையில் இருந்தும், 2 பேர் செங்கல்பட்டில் இருந்தும், ஒருவர் காஞ்சீபுரத்தில் இருந்தும் வந்தவர்கள். மற்றவர்களுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மூலமாக சமூக தொற்றாக நோய் பரவியுள்ளது.

இதையடுத்து அவர்கள் 23 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 551 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து, இவர்கள் வசித்து வரும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே எங்கும் செல்லாதவாறும், அதுபோல் வெளிநபர்கள் யாரும் அப்பகுதிக்குள் நுழையாமல் இருக்கவும் அங்குள்ள பிரதான சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து வந்த 594 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டும், கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 789 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு