செய்திகள்

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் மூட்டைகள் விலை குறைவால் விவசாயிகள் சாலை மறியல்

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் விலை குறைந்ததால், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணி தொடங்கி இருப்பதால், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளது.இதை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்று வருகிறார்கள். நேற்று மட்டும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக வந்திருந்தது. கடந்த சில நாட்களாகவே நெல் வரத்து அதிகமாக இருந்து வருவதால் சுமார் 30 ஆயிரம் மூட்டைகள் தேக்கம் அடைந்து இருக்கிறது. இதனால் புதிதாக வரும் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை வைக்க இடம் இல்லாமல் போனது. இதையடுத்து அதிகாரிகள், குப்பநத்தத்தில் தற்காலிக சேமிப்பு கிடங்கை அமைத்தனர். இங்கும் 10 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளது. இந்த நிலையில் விவசாயிகளிடம் இருந்து நேற்று குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

அதாவது, 75 கிலோ உடைய ஒரு மூட்டை பி.பி.டி. ரக நெல் அதிகபட்சமாக 1,472 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக 1,259 ரூபாய்க்கும், என்.எல்.ஆர். ரக நெல் ரூ.1,196-க் கும், குறைந்த பட்சமாக ரூ.1,069-க்கும், சிஆர்.1009 ரக நெல் அதிகபட்சமாக ரூ.1,120 -க்கும், குறைந்தது ரூ. 1,050-க் கும் விலை போனது.

இது நேற்று முன்தினத்தின் விலையை காட்டிலும் குறைவானது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். இதனால் குப்பநத்தம் தற்காலிக சேமிப்பு கிடங்கில் இருந்த விவசாயிகள் ஒன்று திரண்டு, அந்த பகுதியில் விருத்தாசலம்-கடலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், தற்காலிக சேமிப்பு கிடங்கில் சரியான கழிப்பறை வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் உறுதியளித்தார். இதையேற்று விவசாயிகள் அனைவரும் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து மாலையில், நெல்லுக்கு உரிய விலை வழங்க கோரி அந்த பகுதியில் விவசாயிகள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், நாளை(அதாவது இன்று) அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று தெரிவித்தனர். இதையேற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...