ஈரோடு,
ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் நேதாஜி காய்கறி மற்றும் பழங்கள் சந்தை உள்ளது. இங்கு கடைகள் மிகவும் நெரிசலாக அமைந்து உள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த சந்தை தற்காலிகமாக ஈரோடு பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால், பஸ் நிலையத்தில் சந்தை நடத்துவது மிகவும் சிரமத்துக்கு உரியதாக இருந்தது. எனவே முன்னதாகவே சந்தைக்கு மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது.
அதைத்தொடர்ந்து ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் பொருட்காட்சி, புத்தக திருவிழா ஆகியவை நடத்தும் இடம் தற்காலிக காய்கறி, பழங்கள் சந்தைக்கு தேர்வு செய்யப்பட்டது. அங்கு கடைகள் அமைத்து அனைத்து வசதிகளையும் செய்யும் பணிகள் மே மாதம் தொடங்கியது. மே மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் குறித்த நேரத்தில் முடியவில்லை.
திறப்பு
கடைகளுக்கு தேவையான மேடைகள் அமைத்தல், கூரை அமைத்தல் ஆகிய பணிகள் நிறைவடைந்தன. மின்சார இணைப்பு வழங்கும் பணிகள் ஓரளவு நிறைவு பெற்று இருக்கின்றன. இதற்கிடையே நேற்று வ.உ.சி. பூங்கா மைதானம் தற்காலிக சந்தை திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு புதிய தற்காலிக சந்தையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். புதிதாக அமைக்கப்பட்டு உள்ள கடைகளையும் அவர் பார்வையிட்டார்.
சமூக இடைவெளி
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ஈரோட்டில் ரூ.1 கோடி மதிப்பில் 700 வியாபாரிகள் பயன்பெறும் வகையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டு உள்ள இந்த சந்தையை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.
விழாவில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், செயற்பொறியாளர் விஜயகுமார், மாநகராட்சி பொறியாளர் மதுரம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, மண்டலக்குழு முன்னாள் தலைவர் ரா.மனோகரன், சிந்தாமணி தலைவர் ஜெகதீசன், மார்க்கெட் நிர்வாகிகள் பி.பி.கே.பழனிச்சாமி, முருகுசேகர், அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளர் பி.பி.கே.மணிகண்டன், ஜெயலலிதா பேரவை பகுதி இணைச்செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.