நாகர்கோவில்,
கன்னியாகுமரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்குட்பட்ட புத்தேரியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார்.
பின்னர் வடசேரி, ஒழுகினசேரி, தேரேகால்புதூர், கோதை கிராமம், வடசேரி சந்திப்பு, மணிமேடை சந்திப்பு, கோட்டார் ரெயிலடி திடல், ஆனைபாலம், குளத்தூர், வைத்தியநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு திறந்த ஜீப்பில் சென்று மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார். ஒவ்வொரு இடங்களிலும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருடன் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் மற்றும் பா.ஜனதா கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக சென்று பிரசாரம் செய்தனர்.
முன்னதாக புத்தேரியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வு பா.ஜனதா கொண்டு வந்த திட்டம் அல்ல. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அமல்படுத்தும்படி கூறியதால் கொண்டு வரப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் வெளியேறு மோடி (கெட் அவுட் மோடி) என்று கூறி பிரசாரம் செய்கிறார். அவர் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். அவர் வெளியேறாமல் இருக்கனும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் பிரசாரத்தின் போது பேசுகையில், கடந்த முறை நான் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் அழிக்கப்பட்டு விட்டன. எனவே பா.ஜனதாவின் மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திட தாமரை சின்னத்துக்கு வாக்குகளை தாருங்கள் என்றார்.