செய்திகள்

கச்சத்தீவை மீட்க சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்; ராமநாதபுரத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு

கச்சத்தீவை மீட்க சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம் என முதல் அமைச்சர் பழனிசாமி ராமநாதபுரத்தில் இன்று பேசியுள்ளார்.

ராமநாதபுரம்,

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ராமநாதபுரத்தில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல்லை இன்று நாட்டினார். இதன்பின்பு கூட்டத்தில் மக்கள் முன் அவர் பேசும்பொழுது, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 22 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ கல்லூரி அமைகிறது. ராமநாதபுரத்தில் சுகாதார துறையில் 10 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

தமிழக மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் உள்ளன. புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் மருத்துவ படிப்புகளுக்கு கூடுதலாக 1,650 இடங்கள் பெறப்பட்டுள்ளன. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு அரணாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முன்பு அறிவித்த திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோன்று ஏழை, எளிய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. மீனவர்கள் வாழ்வாதாரத்தை காக்க, கச்சத்தீவை மீட்க சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம் என பேசியுள்ளார்.