சென்னை,
புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்று மழை கடந்த 25-ந்தேதி இரவு வரை பரவலாக பெய்து வந்தது. அதன் பிறகு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் ஆந்திரா-ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் நேற்று கரையை கடந்தது.
இதன் தொடர்ச்சியாக புயல் கரையை கடந்த சூழலில், கிழக்கு திசை காற்று இன்னும் திரும்பாத நிலையில், தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும். அதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில், இது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “நேற்று (28-10-26) தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சியின் காரணமாக இன்று (29-10-26) காலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான்-நிகோபார் தீவுப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையக்கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) வலுவடையக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அதற்கடுத்த 2 நாட்களில் மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் ஆந்திர கடற்கரை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த தாழ்வுப் பகுதியாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தின் 2-வது சுற்று மழை 1-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது. பெரும்பாலும் வட தமிழகப் பகுதிகளில் நல்ல மழையை கொடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.