வானிலை செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேலும், வடகிழக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேலும் என 2 வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 23-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (19.05.2026) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை வானிலை

சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடலில் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இயல்பைவிட அதிக மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் நேற்று வரை இயல்பாக 97 மி.மீ. மழை பதிவாகவேண்டும். ஆனால் அதைவிட 1.3 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது. இது இயல்பைவிட 1 சதவீதம் அதிகம் ஆகும்.