செம்பட்டு,
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்ப போட்டி மலேசியாவில் கடந்த 29-ந் தேதி நடைபெற்றது. பல்வேறு நாடுகளிலிருந்து வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து 75 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.
கோவையை சேர்ந்த பி.எஸ்.ஜி. கல்லூரி மாணவி நிவேதா சிலம்பாட்டத்தில், சிறந்த போட்டியாளர் பிரிவில் 2 தங்க பதக்கத்தையும், நெடுங்கம்பு பிரிவில் வெள்ளி பதக்கத்தையும், நடுங்கம்பு பிரிவில் வெண்கலத்தையும் வென்றார். திருச்சியை சேர்ந்த செவன்த் டே பள்ளி பிளஸ்-2 மாணவர் யுகேஷ்குமார் சுருள்வாள் பிரிவில் வெள்ளி பதக்கத்தையும், கோவையை சேர்ந்த சுதர்சன் தீப்பந்தம் பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றனர்.
3 நாட்கள் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள் விமானம் மூலம் நேற்று திருச்சி வந்தனர். அவர்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் திரண்டு வந்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.