சென்னை
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் பொறுப்பாக , வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் அளிக்கப்பட்டு உள்ளது. முதல்வராக எடபபாடி பழனிசாமி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் முதல்முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டு உள்ளார்.
மணிகண்டன் வகித்து வந்த தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் அரசு கேபிள் டிவி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அண்மையில் நியமிக்கப்பட்டார்.
அரசு கேபிள் தொலைக்காட்சியின் கட்டணம் அண்மையில் மாதத்துக்கு ரூ.130 என்ற அளவுக்குக் குறைக்கப்பட்டது. இதனை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் விமர்சித்து புதன்கிழமை பேட்டியளித்தார். இந்நிலையில், அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ராமநாதபுரத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளை மணிகண்டன் மதிப்பதில்லை என அவர் மீது புகார் இருந்தது. திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ், தான் அந்தத் தொகுதிக்குள் போக முடியாததற்கு மணிகண்டனே காரணம் என பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார்.
அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்புக்கு காரணம் அவர் அளித்த பேட்டி. முதல்வர் எடப்பாடியை கோபத்துக்குள்ளாக்கியது அவரது கருத்து. இதனால் அவரது பதவி பறிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன், முதல்வர் பழனிசாமியை சந்திக்கும் திட்டமில்லை என கூறி உள்ளார்.
இந்த நிலையில் மணிகண்டன் நீக்கம் குறித்து பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர் மணிகண்டனை பதவியிலிருந்து நீக்கியது முதலமைச்சரின் அதிகாரத்திற்குட்பட்ட முடிவு என கூறினார்.