செய்திகள்

தமிழக அரசு என்னென்ன திட்டங்களை வைத்து இருக்கிறது? டாக்டர் ராமதாஸ் கேள்வி

படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக தமிழக அரசு என்னென்ன திட்டங்களை வைத்து இருக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசுத்துறை மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகள் தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. தனியார் வேலைவாய்ப்பு இணையதளம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கடந்த ஜூன் மாதத்தில் சென்னையில் தனியார் வேலைவாய்ப்புகள் அதற்கு முந்தைய ஆண்டின் ஜூன் மாதத்தை விட 12 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள பெரிய நகரங்களில் சென்னையில் மட்டும் தான் வேலைவாய்ப்பு விகிதம் மிக மோசமாக குறைந்திருக்கிறது. சென்னையில் தனியார்துறை வேலைவாய்ப்புகள் குறைந்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் சமூக, பொருளாதார சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அரசு வேலைவாய்ப்பகங்கள் மூலம் வழங்கப்படும் வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளன. 2016-2017-ம் ஆண்டில் வேலைவாய்ப்பகங்கள் மூலம் வழங்கப்பட்ட அரசு வேலைவாய்ப்புகள் 5,802 மட்டுமே. இது அதற்கு முந்தைய ஆண்டில் வழங்கப்பட்ட 9,596 அரசுப் பணிகளை விட 36 சதவீதம் குறைவு.

தனியார்துறை வேலைவாய்ப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் காமராஜர் காலத்தில் விதைக்கப்பட்ட நல்விதைகளால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிகவும் அதிகமாக 37,455 தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இது ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள ஆலைகளில் 16.60 சதவீதமாகும். ஆனால், இவ்வளவு தனியார் தொழிற்சாலைகள் இருந்தும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தனியார்துறை வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதற்கு காரணம் தொழில் மற்றும் உற்பத்தித் துறை வளர்ச்சி குறைந்து வருவது தான்.

இந்த நிலையை மாற்றி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக என்னென்ன திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தப் போகிறது? என்பதை ஆட்சியாளர்கள் தெரிவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்சியிலிருந்து விலக வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.