வாணாபுரம்,
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியான சேர்ப்பாபட்டு, கூடலூர், தச்சம்பட்டு, வாணாபுரம், வரகூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசுக்கு சொந்தமான காப்புக்காடுகள் மற்றும் மலைப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் அதிகளவில் மான், முயல், கரடி, காட்டெருமை, பன்றிகள் உள்ளிட்டவைகள் இருப்பதால் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் வேட்டையாட செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு தேவிநகரைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 20) மற்றும் பொருவளூர் பகுதியை சேர்ந்த பிரபு (20) ஆகிய இருவரும் சேர்ப்பாபட்டு பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சென்றனர்.
இவர்களுடன் சேர்ப்பாபட்டு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான முருகன் (41) என்பவரும் சென்றார். முருகன் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அஜித்குமார் மற்றும் பிரபு ஆகியோர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சென்றதாக தெரிகிறது.
அப்போது அஜித்குமார் கையிலிருந்த துப்பாக்கி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் முன்னால் சென்று கொண்டிருந்த முருகன் முதுகுப்பகுதியில் குண்டு துளைத்ததில் அவர் படுகாயமடைந்தார். முருகனை பிரபு மற்றும் அஜித்குமார் மீட்டு கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் முருகனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, அஜித்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.