செய்திகள்

தீ மூட்டி குளிர் காய்ந்த போது ஆடையில் தீப்பிடித்து இளம்பெண் கருகி சாவு சிங்காரப்பேட்டை அருகே பரிதாபம்

சிங்காரப்பேட்டை அருகே தீ மூட்டி குளிர் காய்ந்த போது ஆடையில் தீப்பிடித்து இளம்பெண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள புளியானூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மனைவி அமுதா. இந்த தம்பதிக்கு வெங்கடேசன் என்ற மகனும், மோனிஷா (வயது 18) என்ற மகளும் உள்ளனர். சிங்காரப்பேட்டை பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குளிர் அதிகமாக இருந்தது. இதனால் மோனிஷா, வெங்கடேசன் ஆகியோர் தங்கள் விவசாய நிலம் அருகில் உள்ள சுள்ளிகளை எடுத்து தீ மூட்டி குளிர் காய்ந்தனர். இதையடுத்து வெங்கடேசன் நிலத்தில் சோளத்தட்டை எடுக்க சென்றுள்ளார்.

அப்போது தீயில் குளிர் காய்ந்து கொண்டிருந்த மோனிஷாவின் ஆடையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. வலியால் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து உடல் கருகிய நிலையில் கிடந்த மோனிஷாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மோனிஷா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.