திருமணம், வளைகாப்பு, குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி, பிறந்தநாள், குழந்தைகளுக்கு சோறூட்டும் நிகழ்ச்சி, கிறிஸ்துமஸ், முகரம் என்று அனைத்து மதத்தினருக்கும், விழாக்களுக்கும் தரக்கூடிய வகையில் மிக மிக அழகான அற்புதமான வெள்ளியினால் செய்யப்பட்ட பரிசுப் பொருட்கள் வந்து விட்டன.
வெள்ளி விளக்குகள் என்று எடுத்துக்கொண்டால் இருபுறமும் அன்னப்பக்ஷிகளும் நடுவில் லக்ஷ்மி அமர்ந்திருப்பது போலும், வேலைப்பாட்டுடன் அமைந்த மேடையின் மேல் யானையானது இரண்டு முன்னங்கால்களையும் மத்தளம் போன்ற அமைப்பின் மேல் வைத்திருக்க அதன் உயர்த்தியதும்பிக்கையின் முனையில் ஐந்து முகத்துடன் கூடிய அன்னப்பக்ஷி விளக்கு போலும், தாமரை பீடத்தின் மேல் மகாலஷ்மி நின்றிருக்க பக்கவாட்டில் தாமரைதண்டானது உயர்ந்து நிற்க அதில் ஆங்காங்கே விளக்குகள் இருப்பது போலும், நுட்பமான வேலைப்பாட்டுடன் கூடிய குத்து விளக்கானது ஐந்து முகத்தை கொண்டிருக்க நடுவில் கிளியின் உருவமானது பிரமிப்புடன் அமைக்கப்பட்டு அதன் முனையில் ஒற்றை இதழ் பூவானது விரிந்திருக்க வெற்றிலையானது குழிவாக நெய்விளக்கு போலும், ராஜஸ்தானி மாடலில் நெய்விளக்கு போலும், தேவதாஸ் நெய்விளக்கு, பஞ்சமுகி தொங்கும் விளக்கு, மீனின் வாயில் விளக்கு போலும், பூவும் இலைகளும் சேர்ந்து வடிவமைக்கப்பட்டது போலும், லக்ஷ்மி குபேர விளக்குகள் போலும் எத்தனையோ விதவிதமான வடிவங்களில் கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாக மிகவும் அழகான விளக்குகள் வந்துவிட்டன.
பென்டென்ட் செட்கள் அதாவது கிறிஸ்டல் கற்கள் அல்லது முத்துக்களை பதித்த டாலர்களுடன் அதே போல் கற்கள் அல்லது முத்துக்கள் பதித்த காதணிகள் மற்றும் மோதிரங்களும் விற்பனைக்கு வந்துள்ளன. பரிசுப்பொருட்களாக கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான சரியான தேர்வாக இவ்வகை பென்டெட் செட்களைச் சொல்லலாம். எல்லா விதமான நகைகளையுமே தங்கத்தால் வாங்கி அணிந்து கொள்ள பொருளாதாரம் இடம் கொடுக்காது. அது போன்ற சமயங்களில் வெள்ளி நகைகளே நமது தேர்வாக இருக்கும். பெரிய ஹாரங்கள், அமெரிக்கன் டைமண்ட் மற்றும் ரூபி வைத்து செய்யப்பட்ட ஹாரங்கள் மற்றும் கழுத்தணிகள், சோக்கர்கள், எத்னிக் வளையல்கள், பெரிய ஜிமிக்கிகள் போன்றவை தங்க பூச்சு மற்றும் ஆன்டிக் பூச்சுகளில் நம்மைக் கவரும் விதத்தில் விற்பனைக்கு வந்திருக்கின்றன.
நிலாப்பிறை, நட்சத்திரம் மற்றும் குரான் எழுத்துக்களுடன் கூடிய பென்டென்ட் மற்றும் குரான் எழுத்துகளுடன் கூடிய பென்டென்ட் மற்றும் கைமோதிரங்களும் தங்கப்பூச்சுகளுடன் கற்கள் பதித்து பார்த்தவுடன் வாங்கத்தூண்டும் விதத்தில் உள்ளன.
அரை வெள்ளிப்பிறையின் நடுவே நட்சத்திரம் இருப்பது போலும், அரை வெள்ளி பிறையின் நடுவே சூரியனானது தனது கதிர்களை விரித்திருப்பது போலும் வந்திருக்கும் காதுத் தொங்கல்கள் முஸ்லிம் பெண்கள் மட்டுமல்லாது இந்து பெண்களும் விரும்பி அணியக்கூடிய விதத்தில் உள்ளது.
சிலுவை பென்டென்டுகள், சிலுவை மங்கலச்சூத்திரங்கள், ஏசு கிறிஸ்துவின் வெள்ளிச்சிலை, சிலுவை பொறிக்கப்பட்ட பிரேசிலெட்டுகள், மேரி மாதா உருவம் பொறிக்கப்பட்ட டாலர்கள், வெள்ளித்தகட்டால் செய்யப்பட்ட ஏசு கிறிஸ்து மற்றும் மேரி மாதா படங்கள் என்று எத்தனையோ வகையான வெள்ளி பரிசுப்பொருட்களைப்பார்க்கும் போது இவற்றை செய்த கைவினைக் கலைஞர்களை நாம் மனதாரப் பாராட்டியே ஆக வேண்டும்.
வெள்ளி விக்கிரகங்கள் குறைந்த விலையிலிருந்து அதிக விலை வரை மிகவும் அழகாகவும், திருத்தமாகவும் செய்யப்பட்டு பரிசுப்பொருட்களின் முதன்மை தேர்வாக உள்ளன. விநாயகர், முருகன், லக்சுமி, ஆஞ்சநேயர், கிருஷ்ணர், பாபா, ஏசு கிறிஸ்து மற்றும் கன்றுடன் பசு விக்கிரகங்களும் பெரும்பாலானவர்களால் தங்கள் சொந்த தேவைக்காக மட்டுமல்லாமல் பரிசளிப்பதற்காகவும் வாங்கப்படுகின்றன.