படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி அருகே கடந்த மாதம் 18-ந்தேதி சாலை ஓரம் காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். ஒரகடம் போலீசார் அந்த ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் சென்னை சர்மா நகர் பகுதியை சேர்ந்த தாரணி (வயது 54) என்பவர் எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தனஞ்செழியனை கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதியில் இருந்து காணவில்லை என புகார் அளித்து இருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக தனஞ்செழியனின் மருமகனான ஆலந்தூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் சரவணனை (36) போலீசார் அழைத்து விசாரித்தனர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதில், கார் டிரைவரான சரவணன் இரவு பணிக்கு அடிக்கடி செல்வதால், ஏதோ தவறு நடப்பதாக நினைத்த தனஞ்செழியன், மருமகனிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி வந்தவாசியை சேர்ந்த தனது நண்பர் பிரபு (35) என்பவரது மனைவியின் சீமந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நண்பர்களுடன் சரவணன் புறப்பட்டார்.
அப்போது நானும் உங்களுடன் வருகிறேன் என தனஞ்செழியன் கூறியுள்ளார். இதனால் அவரையும் தங்களுடன் அழைத்துக்கொண்டு சரவணன் காரில் சென்றார். கார் படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி அருகே உள்ள பனப்பாக்கம் அருகே காட்டு பகுதியில் சென்றபோது அனைவரும் காரில் இருந்து இறங்கினர்.
அப்போது சரவணன் மற்றும் அவரது நண்பர்களான சென்னையை சேர்ந்த பிரபு (35), பிரகாஷ் (34) ஆகியோர் தனஞ்செழியனை அடித்துக்கொலை செய்துவிட்டு உடலை அந்த பகுதியில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சரவணனை போலீசார் ஒரகடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருந்த வழக்கை ஒரகடம் போலீசார் கொலை வழக்காக மாற்றினர். பின்னர் சரவணன், பிரபு, பிரகாஷ் ஆகியோரை கைது செய்து நேற்று ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்கள் 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.