சென்னை,
நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. திருநாவுக்கரசர் நேற்று திடீரென்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் மணிநேரம் நடந்தது. இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரஜினிகாந்த் என்னுடைய நண்பர். என் வீட்டு விழாக்களுக்கு அவர் வந்திருக்கிறார். என்னுடைய பேரனுக்கு ஒரு வயதாகிறது. அவனின் பிறந்த நாளையொட்டி குடும்பத்துடன் வாழ்த்து பெற, என் மகள், மருமகன், பேரன் எல்லோருமே வந்தோம்.
ரஜினிகாந்த் யாரிடத்திலும் ஆலோசனை பெற வேண்டிய அவசியத்தில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவருக்கு அரசியல் அனுபவம், பொது அனுபவம் இருக்கிறது. அவருக்கு நான் எந்த ஆலோசனையும் சொல்லவில்லை.
ரஜினிகாந்த் ஏமாற்றம் இருப்பதாக சொன்னது பற்றி எனக்கு தெரியாது. நான், உங்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக பேட்டி அளித்து கொண்டிருக்கிறேன். பொதுவான அரசியல் விஷயங்கள், நாட்டு நடப்புகள் குறித்து நாங்கள் பேசினோம். அதே நேரத்தில் உங்களிடம் (நிருபர்கள்) சொல்லக்கூடிய விஷயம் இல்லை. இருந்தால் கண்டிப்பாக நானே சொல்லியிருப்பேன்.
ஜி.கே.வாசனின் தந்தை ஜி.கே.மூப்பனாருடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. ஜி.கே.வாசன் என் நண்பர். அவர் உள்பட மாநிலங்களவைக்கு தேர்வாகி உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.