கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,988 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 1445 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
வடலூரை சேர்ந்தவர் 48 வயது பெண். காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே நேற்று சிலரது உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 79 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர்களில் மங்களூரை சேர்ந்த டாக்டர் ஒருவர், கடலூர், மங்களூரை சேர்ந்த 6 போலீஸ்காரர்கள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், சேலம், கும்பகோணம், கேரளா, ஆந்திரா, சார்ஜா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு வந்த 10 பேருக்கும், கம்மாபுரத்தை சேர்ந்த கர்ப்பிணிக்கும், புவனகிரியை சேர்ந்த பிரசவித்த பெண்ணுக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 34 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,067 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 40 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும் 1985 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.