நோக்குவித்தை பாவைகூத்து! இது அதிசயமான, அபூர்வமான கலை. கடவுள் வழிபாட்டோடு தொடங்கும் இ்ந்த பாவைகூத்தை பெண்கள் மட்டுமே நடத்துகிறார்கள். இரட்டை திரிகள் கொளுத்திய குத்துவிளக்கின் ஒளியில் இரவில் இது நிகழ்த்தப்படுகிறது. தோல்பாவைகூத்தில் பாவை ஓவியங்களை கைகளில் பிடித்து அசைத்து இயக்குவார்கள். அதில் கைகளுக்குதான் அதிக வேலை இருக்கும். இ்ந்த நோக்குவித்தை பாவைகூத்தில் கனம் குறைந்த ஓவிய சிற்பத்தை பெண் கலைஞர் தனது மேல் உதட்டின் மேல்வைத்து அசைத்து நிகழ்த்துகிறார். கமுகு மரத்தில் இருந்து இரண்டடி உயரத்திற்கு கோல் உருவாக்கி அதன் மேல், காட்சிக்கு ஏற்ற சிற்பத்தை நிலை நிறுத்தி இயக்கி இந்த கலையை நிகழ்த்துகிறார்கள். ஆச்சரியமான விதத்தில் நிகழ்த்தும் இந்த கூத்து மூலம் ராம-ராவண யுத்தம், சீதை திருமணம் போன்ற கதைகள் நடத்தப்படுகின்றன. இந்த அபூர்வ கலைக்கு இப்போது மிகப்பெரிய கவுரவம் கிடைத்திருக்கிறது. நோக்குவித்தை பாவைகூத்து நடத்தும் பங்கசாக்ஷி அம்மாள் பத்மஸ்ரீ விருதினை பெற்றிருக்கிறார். இவர் கேரளாவில் மூழிக்கல் என்ற பகுதியை சேர்ந்தவர்.
இளம் வயதில் இருந்தே இந்த கலையில் ஈடுபட்ட பங்கசாக்ஷி தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். அதனால் அவர் மேடைகளில் தற்போது இந்த கலையை நிகழ்த்துவதில்லை. அவருக்கு பதிலாக அவரது பேத்தி ரஞ்ஜினி இதனை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இந்த கலைக்கு கிடைத்திருக்கும் கவுரவத்தால் பாட்டியும், பேத்தியும் பெருமிதம் கொள்கிறார்கள்.
எங்கள் பூர்வீக தொழிலே இதுதான். எனது மூதாதையர்கள் திருவிதாங்கூர் மன்னர்களிடம் இருந்து பரிசாக பட்டும், வளையலும் பெற்றிருக்கிறார்கள். முந்தைய காலத்தில் இ்ந்த கலை ஓணம் துள்ளல் என்ற பெயரில் அறியப்பட்டது. எனக்கு 11 வயதில் இந்த கலையை கற்றுத்தந்தார்கள். சிறிய தென்னங்குறும்பலை தென்னங்குச்சியில் பொருத்தி மேல் உதட்டில்வைத்து பயிற்சிபெற்றேன். தென்னங்குச்சி முகத்தில் குத்துவதும், குறும்பல் முகத்தில் விழுந்து காயம் அடைவதும் வாடிக்கையாக இருந்தது.
திருமணத்திற்கு பின்பு கணவர் வீட்டிற்கு வந்தேன். கணவர் சிவராம பணிக்கரும், அவரது குடும்பத்தினரும் பாவைக்கூத்துக்கு அதிக மரியாதை கொடுத்தனர். கணவர் எனக்கு புதிய பாவை சிற்பங்களையும் உருவாக்கித்தந்தார். ஏழிலம்பாலை என்ற மரத்தின் தடியை செதுக்கி இந்த பாவைகளை உருவாக்கு கிறோம். கீழே இணைக்கும் கோலுக்காக கமுகு மரத்தை பயன் படுத்துகிறோம். கரி, பச்சிலை சாறு, பழச்சாறு போன்றவைகள் மூலம் பாவை சிற்பத்திற்கு வர்ணம்தீட்டுவோம். ராமாயணம், மகாபாரத கதைகளை பாடல்களாவும் என் கணவர் உருவாக்கித்தந்திருக்கிறார் என்று கூறும் பங்கசாக்ஷி, இது மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யவேண்டிய கலை என்றும் சொல்கிறார்.
இந்த கலையை நிகழ்த்திக்காட்ட மனதை ஒருநிலைப்படுத்தும் சக்தியும், கடவுள் அனுகிரகமும் தேவை. நாங்கள் விரதமிருந்துதான் இந்த கலையை நிகழ்த்துவோம். புல்லில் தயார்செய்த பாயை கீழே விரித்து அதில் உட்கார்ந்துகொண்டு, குத்து விளக்கை ஏற்றி கடவுளை தொழுது கலையை தொடங்குவோம். இந்த கலை சிவபெருமானின் முக்கண்ணோடு தொடர்புடையதாக நம்புகிறோம். இந்த கலையை நிகழ்த்துவது அவ்வளவு எளிதானதல்ல. கூத்தை மக்கள் ரசிக்கும்விதத்தில் நடத்திக்காட்ட கடின முயற்சி அவசியம். காட்சிகளுக்கு தக்கபடி சிற்பங்களை நகர்த்துவதற்கு சில நேரங்களில் நாக்கையும் பயன் படுத்துவோம். ஒரு நிகழ்ச்சி ஒன்றரை மணிநேரம் நடக்கும் என்கிறார், பங்கசாக்ஷி.
2009-ம் ஆண்டு பிரான்சில் இந்திய சுற்றுலா நிகழ்ச்சி நடந்தது. அதில் கேரள அரசு சார்பில் நோக்குவித்தை பாவைகூத்து நடத்த பங்கசாக்ஷி பாரீஸ் நகருக்கு சென்றிருக்கிறார். அங்கு கதை விளக்கம் அளித்துவிட்டு பின்பு இதனை நிகழ்த்தி பாராட்டு பெற்றிருக்கிறார்.
பங்கசாக்ஷிக்கு விஜயன், ராதாமணி, சிவன் ஆகிய மூன்று பிள்ளைகள். எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது. அதில் ராதாமணிக்கு ரஞ்சித், ரஞ்ஜினி ஆகிய இரு பிள்ளைகள். அவர்கள் பாட்டி நடத்திய நோக்குவித்தை பாவைகூத்தைப் பார்த்து வியந்திருக்கிறார்கள். இந்த கலையை பெண்கள் மட்டுமே நிகழ்த்தவேண்டும் என்பதால் பாரம்பரியப்படி ரஞ்ஜினி இதனை கற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறார்.
இந்த கலையை கற்றுக்கொள்வது எளிதில்லை. 7 வயதில் எனது மேல் உதட்டில் கோல்களைவைத்து பேலன்ஸ் செய்யும் பயிற்சியில் ஈடுபட்டேன். அதை நான் கற்றுக்கொள்ளவே இரண்டு வருடங்கள் ஆயின. இதில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சிற்பமும் கால் கிலோ எடை இருக்கும். சில காட்சிகளை விளக்க மூன்று சிற்பங்களை ஒன்றாக நிலைநிறுத்தவேண்டியிருக்கும். பத்துதலை ராவணன் சிற்பம் அதிக கனமானது. ராம- ராவண யுத்தத்தின்போது அதிக எடைகொண்ட சிற்பங்கள் பயன்படுத்தப்படும். எனது தாத்தா மரத்தில் செதுக்கி தந்த சிற்பங்களைதான் நானும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
ஏழு வருடங்களுக்கு முன்பு பாட்டி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதன் பின்பு நான் தொடர்ச்சியாக மேடைகளில் நிகழ்ச்சி நடத்த ஆரம்பித்தேன். எனக்கு என் அம்மா ராதாமணியும், அண்ணன் ரஞ்சித்தும் உதவுகிறார்கள். அம்மா எப்போதும் என்னோடு வருவார். அண்ணன் சிற்பங்களை வரிசைப்படுத்தி தந்து உதவுவார். இசைக் கருவியை மீட்ட ஒருவரும், பாடுவதற்கு இன்னொருவரும் எங்கள் குழுவில் இருக்கிறார்கள். இதை ஒரு குழுநிகழ்ச்சியாக நடத்துகிறோம். ஆனந்த் என்பவர் புதிய கதைகளை எழுதி, பாட்டும் உருவாக்குகிறார்.. என்று ரஞ்ஜினி சொல்கிறார். இவர் வேல என்ற சமூகத்தை சேர்ந்தவர். அந்த சமூகத்தினர் மட்டுமே இதை நடத்துகிறார்கள். இந்தியாவில் வேறு எங்கும் இந்த கலை இல்லை. ரஞ்ஜினி மட்டுமே இதன் ஒரே கலைஞராக வலம்வருகிறார்.
கடந்த ஆண்டு பெங்களூருவில் சர்வதேச பொம்மலாட்ட கலைத்திருவிழா நடந்தது. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொம்மலாட்ட கலைஞர்கள் இடம்பெற்று, அவர்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அதில் நாங்களும் இடம்பெற்றோம். அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் எங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. பின்பு டெல்லியில் உள்ள இந்திராகாந்தி தேசிய நுண்கலை மையத்திலும் நிகழ்ச்சி நடத்தினோம். அங்கு வந்திருந்த மத்திய அரசு அதிகாரிகள்தான் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்க பரிந்துரைத்தார்கள். இந்த விருது கிடைக்க கடவுள்தான் காரணம்.. என்கிறார், ரஞ்ஜினி.
பங்கசாக்ஷிக்கு 84 வயது. கட்டிமுடிக்கப்படாத நிலையில் இருக்கும் ராதாமணியின் வீட்டில் அவர்களோடு சேர்ந்து பங்கசாக்ஷியும் வசித்து வருகிறார். ராதாமணி கூலிவேலை செய் கிறார். ரஞ்ஜினி பி.காம். இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார்.