தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி அருகே உங்கரானஅள்ளியை அடுத்த சேவிகொட்டாயில் உள்ள மாரியம்மன் கோவிலில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் நேற்று திரண்டனர். அங்கு மழை பெய்யவும், விவசாயம் செழிக்க வேண்டி களி உருண்டைகளை வருண பகவானுக்கு படையலிட்டு சிறப்பு பூஜை நடத்தினார்கள். பின்னர் அங்குள்ள விவசாய நிலத்தில் கூட்டமாக அமர்ந்த பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு நடத்தினார்கள். அப்போது மழை வேண்டி வானத்தை நோக்கி கைகூப்பி வணங்கினார்கள். இந்த வழிபாட்டை பார்க்க சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் திரண்டனர். வழிபாட்டின் முடிவில் களி பிரசாதமாக வழங்கப்பட்டது.