வத்திராயிருப்பு,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் மத்திய அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம், தர்ணா என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வத்திராயிருப்பு பகுதியில் முஸ்லிம் ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பிலும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், அந்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும் வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடல் பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கையில் தேசியக் கொடியை ஏந்தி இதில் கலந்துகொண்டனர். கூமாப்பட்டி முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஜனாப். இனாயத்துல்லா தலைமை தாங்கினார். மதார் மைதீன், முகம்மது அலிபாத், அப்துல் காதர், திவான் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகம்மது அலி ஜின்னா பைஜி வரவேற்புரை நிகழ்த்தினார்.
முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன், ம.ம.க. மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது,உஸ்மானியா, முகம்மது இல்யாஸ் உஸ்மானி, சதக்கத்துல்லா, காலித் முகம்மது ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.