கொழும்பு,
இலங்கையில், 2009-ம் ஆண்டு நடந்த விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது, தமிழ் இளைஞர்கள் பலர் மாயமானார்கள். குறிப்பாக, 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி, கொல்லப்பட்ட வழக்கில் கடற்படை வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் முக்கிய குற்றவாளியான கடற்படை உயர் அதிகாரி சாந்தனா பிரசாத் என்பவரை வெளிநாட்டுக்கு தப்ப வைத்ததாக ராணுவ உயர் அதிகாரி ரவீந்திர விஜேகுணரத்னே மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேடு கோர்ட்டு, விஜேகுணரத்னேவை கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டது.
பல மாதங்களாக தவிர்த்து வந்த விஜேகுணரத்னே, நேற்று ராணுவ சீருடையில் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவருடைய கமாண்டோ வீரர்களும் வந்திருந்தனர். தன் மீதான குற்றச்சாட்டை விஜேகுணரத்னே மறுத்தார். இருப்பினும், அவரை 5-ந் தேதிவரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேடு உத்தரவிட்டார்.