உலக செய்திகள்

பயணிகள் ரெயில், சரக்கு ரெயில் மோதி விபத்து - 15 பேர் பலி

பயணிகள் ரெயிலும், சரக்கு ரெயிலும் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

டாக்கா,

வங்காளதேச நாட்டின் டாக்கா மாகாணம் கிஷோர்கஞ்ச் மாவட்டம் பைரப் ரெயில் நிலையத்தில் இருந்து டாக்கா நோக்கி இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று மாலை புறப்பட்டது. பைரப் ரெயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக டிராக் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

மாற்று தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் மெல்ல மாறிக்கொண்டிருந்தபோது திடீரென எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தில் சரக்கு ரெயில் வேகமாக வந்தது. எக்ஸ்பிரஸ் ரெயில் முழுமையாக மாற்று தண்டவாளத்திற்கு செல்வதற்கு முன் அதில் சரக்கு ரெயில் வந்தது.

இதில், எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் மீது சரக்கு ரெயில் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்த 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.