ஜகர்த்தா,
இந்தோனேசிய நாட்டின் பப்புவா மாகாணத்தில் வாமினா நகரில் உயர்நிலை பள்ளியொன்றில் வேறு நகரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பப்புவா நகரை சேர்ந்த மாணவரை கடந்த வாரம் குரங்கு என திட்டி விட்டார் என புரளி கிளம்பியது.
இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய போராட்டத்தில் அரசு கட்டிடங்கள், கடைகள் மற்றும் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. கார்கள் மற்றும் மோட்டார் பைக்குகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இந்த கலவரத்தில் வாமினா நகரில் வீடுகள் அல்லது கடைகளில் தீப்பற்றி எரிந்ததில் சிக்கி பொதுமக்களில் 16 பேர் பலியாகினர். வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இதேபோன்று ஜெயபுரா பகுதியில் நடந்த மற்றொரு போராட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் மற்றும் 3 பேர் பலியாகி உள்ளனர். 70 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் மாணவருக்கு எதிராக இனவெறி சம்பவம் நடந்ததற்கான சான்று எதுவும் கண்டறியப்படவில்லை. மாணவர்களிடையே பொய்யான புரளிகள் பரவியுள்ளன. வன்முறையை ஏற்படுத்தவே உள்நோக்கத்துடன் பொய்யான தகவல் பரப்பப்பட்டு உள்ளது என நம்பப்படுகிறது என்று போலீஸ் அதிகாரி ரோட்ஜா கூறியுள்ளார்.