கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க ஐனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷியாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது பற்றி அமெரிக்க புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் டிரம்பின் மகன் ஜான் டிரம்ப், கிளிண்டனுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ரஷ்யாவில் உள்ள வழக்கறிஞரை சந்தித்ததாகவும் அதனை ஜான் டிரம்ப் ஒப்பு கொண்டதாகவும் அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அந்த சந்திப்பு தொடர்பான இ-மெயில் தகவல்களை ஜான் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சந்திப்பின் போது எதுவும் பேசவில்லை என தெரிவித்துள்ள ஜான் டிரம்ப், ரஷ்ய பெண் வழக்கறிஞர் உடனான சந்திப்பு குறித்து, தன்னுடைய தந்தையிடம் கூறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அந்த சந்திப்பில் ரஷ்ய வழக்கறிஞர் நடாலியா வெசெல்னிட்ஸ்கயா மட்டும் கலந்து கொண்டதை ஜான் டிரம்ப் முன்பு ஒப்புக்கொண்டார்.
தற்போது பரப்புரையாளராக இருக்கும் ரினாட் அக்மெட்சின் டிரம்ப் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் தான் கலந்து கொண்டதை அமெரிக்க ஊடகம் ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த சந்திப்பில் ஹிலாரி கிளிண்டன் மீது பாதகம் விளைவிக்ககூடிய ஆதாரங்கள் டிரம்பின் மகனுக்கு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாக அவரது மின்னஞ்சல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய உறுப்பினர்களுக்கும் டிரம்பின் தேர்தல் பிரச்சார குழு உதவியாளார்களுக்கும் இடையே நடைபெற்ற முறையற்ற இராஜாந்திர பேச்சுவார்த்தைகளுக்கான உறுதியான ஆதாரமாக இது வெளியாகியுள்ளது.