பெய்ரூட்,
கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள நகரங்களை அதிபர் படைகள் மீட்டு வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள அனைத்து நகரங்களையும் மீட்காமல் விட மாட்டோம் என்று பஷார் அல் ஆசாத் அரசு சபதம் செய்து, தாக்குதல் தொடுத்து வருகிறது.
தலைநகர் டமாஸ்கஸ் அருகில் உள்ள கவுட்டா நகரை கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்து மீட்பதற்காக அதிபர் படைகள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன.
இந்த நிலையில் அங்கு அதிபர் படைகளின் போர் விமானங்கள் கடும் குண்டுவீச்சில் ஈடுபட்டன. அந்த குண்டுகள் ஜமால்கா, அர்பாயீன், ஹாஸா, பெய்ட்டு சூவா உள்ளிட்ட நகரங்களிலும் விழுந்து பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தின. அப்பாவி மக்கள் 29 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
நாட்டின் வட மேற்கு பகுதியில் இத்லிப் மாகாணத்தின் கிராமப்புறங்களிலும் தாக்குதல்களை அதிபர் ஆதரவு படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஹெலிகாப்டரில் இருந்து 2 பீப்பாய் ரசாயன வாயுக்கள் போடப்பட்டதாக ஒயிட் ஹெல்மெட் சிவில் ராணுவ பிரிவை சார்ந்த ஆயுத வல்லுனர் குழு தெரிவிக்கிறது.
இதற்கிடையே கவுட்டா நகர் பகுதிகளில் உணவுப்பொருட்களும், மருந்துப் பொருட்களும் தீர்ந்து போய் விட்டன. இது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
சிரியா அதிபர் படைகள் தொடர்ந்து ரசாயன வாயு தாக்குதல்களை நடத்தி வருவதற்கு அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் கவலை தெரிவித்து உள்ளன.