உலக செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டில் 5 ஆண்டுகள் சிறை; ஆங் சான் சூகியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

ஊழல் குற்றச்சாட்டில் 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆங் சான் சூகி, மியான்மர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

தினத்தந்தி

நேபிடாவ்,

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம், ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து மியான்மரின் தலைவரான ஆங் சான் சூகியை ராணுவம் கைது செய்து வீட்டுக் காவலில் சிறை வைத்தது.

இதையடுத்து ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு கடந்த டிசம்பர் மாதம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம், வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டில் மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் பின்னர் அந்த தண்டனை 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆங் சான் சூகி, தனது சக அரசியல் தலைவர் ஒருவரிடம் இருந்து தங்கம் மற்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்க டாலர்களை லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டில் தனக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆங் சான் சூகி அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அவரது மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்