உலக செய்திகள்

8 வயது இந்திய யோகா சாம்பியனுக்கு கவுரவம் ஆண்டின் சிறந்த இங்கிலாந்து இந்தியராக தேர்வு

இங்கிலாந்து நாட்டில் கென்ட் நகரில் உள்ள செயின்ட் மைக்கேல் தொடக்கப்பள்ளியில் படித்து வரும் 8 வயது இந்திய வம்சாவளி சிறுவன், ஈஷ்வர் சர்மா.

லண்டன்,

சிறுவன் ஈஷ்வர் சர்மா யோகா சாம்பியன் ஆவார். கனடாவில் கடந்த மாதம் நடந்த உலக மாணவர்கள் விளையாட்டுப்போட்டியில் இங்கிலாந்து சார்பில் கலந்து கொண்டு யோகாவில் தங்கப்பதக்கம் பெற்றார்.

இந்த நிலையில் இவருக்கு புதிய கவுரவம் வந்து சேர்ந்து உள்ளது.

அவர் இந்த ஆண்டின் சிறந்த இங்கிலாந்து இந்தியராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பர்மிங்ஹாமில் நடந்த விழாவில், இளம் சாதனையாளர் பிரிவில் இந்த கவுரவம் அவருக்கு வழங்கப்பட்டது.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஈஷ்வர் சர்மா, நான் எப்போதும் யோகாவில் மாணவன். நான் பெற்றுள்ள அறிவு, எனது ஆசிரியர்களிடம் இருந்து எனக்கு கிடைத்தது ஆகும் என்று குறிப்பிட்டார்.

ஈஷ்வர் சர்மாவின் தந்தை விஸ்வநாத், யோகா பயிற்சியாளர்.

இவரது குடும்பம், இந்தியாவில் மைசூருவை பூர்வீகமாக கொண்டதாகும்.

ஈஷ்வர், குழந்தைகளிடையே யோகா பற்றியும், அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு உள்ளார் என விஸ்வநாத் கூறினார்.