நியூயார்க்,
அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சனிக்கிழமை டெக்சாஸ் மாகாணத்தின் ஒடேசா நகரில் சேத் ஆரோன் அடோர் என்பவர் காரில் சென்றபடியே கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டதில் 7 பேர் பலியானார்கள். இந்த சோகத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள் அலபாமா மாகாணத்தில் 14 வயது சிறுவன் தனது தந்தை மற்றும் வளர்ப்பு தாய் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எல்க்மான்ட் நகரை சேர்ந்த அந்த சிறுவன் கடந்த திங்கட்கிழமை இரவு 10.30 மணிக்கு தனது தந்தை ஜான் சிஸ்க் (38) மற்றும் வளர்ப்பு தாய் மேரி சிஸ்க் (35) ஆகியோரை துப்பாக்கியால் சுட்டான். இதில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதன் பின்னர் அந்த சிறுவன் தனது 6 வயது தம்பி மற்றும் 5 வயது தங்கையுடன், மற்றொரு தம்பியான 6 மாத குழந்தையையும் துப்பாக்கியால் சுட்டான்.
அதனை தொடர்ந்து, சிறுவன் துப்பாக்கியை தூக்கி எறிந்துவிட்டு, போலீசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் தனது குடும்ப உறுப்பினர்களை சுட்டுக்கொன்றுவிட்டதாக கூறினான். அதன் பேரில் போலீசார் சிறுவனின் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது, துப்பாக்கியால் சுடப்பட்டவர்களில் 3 பேர் இறந்துகிடந்தனர். 2 பேர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
அவர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எனினும் சிகிச்சை பலன் இன்றி அவர்கள் 2 பேரும் இறந்தனர். இதற்கிடையில் குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்து, எதற்காக அவன் இப்படி செய்தான் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.