உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சாலையோரம் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் 11 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் சாலையோரம் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் என 11 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இரு தரப்புக்கு இடையிலும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமெரிக்கா தலைமையிலான அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வாபஸ் பெறும் முடிவையும் அமெரிக்கா எடுத்து உள்ளது. அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வந்தபோதிலும் மறுபுறம் தலீபான்களின் வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன.

அந்நாட்டில் தலீபான் அமைப்பினரின் தாக்குதலுக்கு, அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என எவ்வித வேற்றுமையுமின்றி பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் பாத்கி மாகாணத்தில் அப்கமாரி மாவட்டத்தில் சலாங் கிராமத்தில் சாலையோர பகுதியில் வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில், திடீரென வெடிகுண்டு வெடித்ததில் அந்த பகுதி வழியே சென்றவர்களில் குழந்தைகள், பெண்கள் என 11 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இதுபற்றி அப்கமாரி மாவட்ட கவர்னர் குதாதத் தயீப் கூறும்பொழுது, இந்த பயங்கரவாத செயலில் தலீபான் பயங்கரவாதிகளே ஈடுபட்டிருக்க கூடும் என குற்றச்சாட்டாக கூறினார். எனினும், இந்த சம்பவத்திற்கு தலீபான் அமைப்பு பொறுப்பேதும் ஏற்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று 10 மாகாணங்களில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்துள்ளது என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து