புதுடெல்லி,
பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் தொலைபேசி மூலம் உரையாடினார்கள். அப்போது பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
தொழில், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படுகின்றன. அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆகிய மூவரும் அங்கு தனியாக சந்தித்து பேசினார்கள்.
இந்த சந்திப்புக்கு பின் பிரதமர் மோடியும், டிரம்ப்பும் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் உரையாடினார்கள். அப்போது இருவரும் புது வருட வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, எரிசக்தி, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படுவது, ஆப்கானிஸ்தானில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவை பற்றி அப்போது இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது.
பரஸ்பர உறவுகளை மேம்படுத்த இந்த ஆண்டிலும் (2019) இரு நாடுகளும் இணைந்து பாடுபடவேண்டும் என்றும் அப்போது இரு தலைவர் களும் ஒப்புக்கொண்டனர்.