காபூல்,
ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு ஈத் பண்டிகையையொட்டி தலீபான்களுடன் நிபந்தனையுடன் கூடிய போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டூஸ் மாகாணத்தில் இருந்து 3 பேருந்துகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 100 பேர் புறப்பட்டு சென்றுள்ளனர்.
அவர்களை தலீபான் தீவிரவாதிகள் கான் அபாத் அருகே சாலையில் வைத்து வழிமறித்தனர். பின்னர் அனைவரையும் பேருந்தில் இருந்து இறங்க செய்து தங்களுடன் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றனர்.
அவர்கள் அனைவரும் படாக்ஷன் மற்றும் தக்வார் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் காபூல் நோக்கி பேருந்துகளில் சென்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 17 வருட போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என தீவிரவாத தலைவர் மவுலவி ஹைபதுல்லா கூறியிருந்த நிலையில் தீவிரவாதிகள் பணய கைதிகளாக பொதுமக்களை பிடித்து சென்றுள்ளனர். ஆனால் அவர்களை எங்கு கொண்டு சென்றனர் என்ற விவரம் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.