உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு

ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 வீரர்கள் பலியாகினர்.

தினத்தந்தி

எல்லையில் பதற்றம்

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் எல்லையோர பகுதிகளில் இருந்து பயங்கரவாதிகள் தங்கள் நாட்டுக்குள் ஊடுருவி, பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

தொடர் பயங்கரவாத தாக்குதல்

ஆனால், தங்கள் மண்ணில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இயங்கவில்லை என தலீபான்கள் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானின் எல்லையோரம் அமைந்துள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு

குறிப்பாக கைபர் பக்துங்வா மாகாணத்தின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில், அடிக்கடி இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கின்றன. இதன் காரணமாக, அங்கு கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள தேவகார் நகரில், ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் சிலர் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

3 வீரர்கள் பலி

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதே வேளையில், ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் தரப்பிலும் பெரும் இழப்பு ஏற்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

எனினும், எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பதை பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கவில்லை.

பாகிஸ்தான் கண்டனம்

இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்துவதை பாகிஸ்தான் கடுமையாக கண்டிக்கிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு இதுபோன்ற செயல்களை எதிர்காலத்தில் நடத்த அனுமதிக்காது என்று எதிர்பார்க்கிறது.

பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக பாகிஸ்தானின் எல்லைகளை பாதுகாப்பதில் ராணுவம் உறுதியாக உள்ளது. நமது துணிச்சலான வீரர்களின் இத்தகைய தியாகங்கள்; நமது உறுதியை மேலும் வலுப்படுத்துகின்றன என கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்