ஹெராத்,
ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி தலைமையிலான அரசுக்கு எதிரான போரில் வெற்றியடைந்த தலீபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆட்சியை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், தலீபான்களின் ஆட்சியில் குடிமக்கள், பாதுகாப்பு பற்றிய அச்சத்துடனேயே உள்ளனர். கடந்த வாரம் காபூலின் மேற்கே சோதனை சாவடி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஜைனப் (வயது 25) என்ற இளம்பெண் பலியானார்.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்தது. தனது மகள் படுகொலைக்கு நீதி வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என அவரது தந்தை கோரியுள்ளார். இந்த நிலையில், ஹெராத் மாகாணத்தின் காஜிமி பகுதியில் அமைந்த சோதனை சாவடி ஒன்றில் கார் மீது திடீரென துப்பாக்கி சூடு நடந்தது. இதில், காரில் பயணித்த டாக்டர் மற்றும் டிரைவர் உயிரிழந்து உள்ளனர்.
கொல்லப்பட்ட டாக்டர் ஜலாலி என அடையாளம் காணப்பட்டு உள்ளார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார். எனினும், தலீபான் அதிகாரிகள் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.