வாஷிங்டன்,
ஆப்கானிஸ்தான் அரசு படைகளுடன் கடந்த 20 ஆண்டுகளாக சண்டையிட்டு வந்த தலீபான் பயங்கரவாதிகள் கடந்த 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசம் ஆக்கினார்கள். அப்போது முதல் ஆப்கானிஸ்தானில் அமைதியற்ற சூழல் நிலவிவருகிறது. குறிப்பாக தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 வாரங்களாக உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு காபூல் விமான நிலையத்துக்கு வெளியே ஐ.எஸ். கோரசான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் அதிர வைத்த இந்த கொடூர தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் உள்பட 170 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் அதிகபட்சமாக உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும்.
எனவே இந்த தாக்குதல் தொடர்பாக வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் உணர்ச்சிப்பெருக்குடன் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். எங்களது படைகளால் அவர்களை வேட்டையாடுவோம். இந்த குற்றத்துக்கான விலையை அவர்கள் கொடுத்தாக வேண்டும் என சூளுரைத்தார்.
ஜோ பைடனின் இந்த வார்த்தைகளை நிஜமாக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியது அமெரிக்க ராணுவம்.
அதன்படி நேற்று ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் இருக்கும் ஐ.எஸ். கோரசான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து தாக்க டிரோன் (சிறிய ரக ஆளில்லா விமானம்) அனுப்பிவைக்கப்பட்டது. இந்த டிரோன், ஐ.எஸ். கோரசான் பயங்கரவாதிகளின் நிலைகள்மீது குண்டுகளை வீசி தாக்கியது. இதில் காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு சதிசெய்து, மூளையாக இருந்து நடத்திக்காட்டிய பயங்கரவாதி கொல்லப்பட்டார் என தகவல்கள் கூறுகின்றன.
டிரோன் தாக்குதலில், ஐ.எஸ். கோரசான் பயங்கரவாத அமைப்பின் சார்பில் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்தவர் கொல்லப்பட்டார் என அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை பிரிவின் தளபதி பில் அர்பன் கூறுகையில், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் தாக்குதல் நடத்தினோம். நாங்கள் குறிவைத்த இலக்கில் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் நிச்சயமாக அப்பாவி பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
காபூல் விமான நிலைய பயங்கரவாத தாக்குதல் சதிகாரன், பழிக்குப்பழி வாங்குகிற விதமாக 2 நாளிலேயே அமெரிக்காவால் வேட்டையாடப்பட்டிருப்பது அதிர வைத்துள்ளது.