பெர்லின்,
ஜெர்மனியில் பெர்லின் நகரில் வீடு ஒன்று பல நாட்களாக காலியாக கிடந்துள்ளது. இதனை ஒரு கும்பல் ஆக்கிரமித்து குடியேறி உள்ளது. அவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டும் வந்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் அவர்களை வெளியேறும்படி கூறினர். ஆனால், அந்த கும்பலை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் திடீரென்று போலீசார் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
போலீசார் காயமடைந்த சூழலிலும், தங்களது பணியில் இருந்து விலகாமல் ஆக்கிரமிப்பு நபர்களை வெளியேற்றும் பணியை தொடர்ந்தனர். ஆக்கிரமிப்பாளர்களை போலீசார் உள்பட யாரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக துணியால் தங்களது முகங்களை அவர்கள் மறைத்து கொண்டனர். அருகேயுள்ள கட்டிடங்களின் மேற்கூரை பகுதியில் இருந்தும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
போலீசாரின் தடுப்பான்களையும் தீயிட்டு கொளுத்தி உள்ளனர். போலீசார் தண்ணீரை பாய்ச்சி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.